சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
காமினி வலேபொட கவலை
இந்த நிலையில் மீள் பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு முன்னர் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்ததாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 2022(2023) சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை தாமதம் காரணமாக, மாணவர்கள் உயர்தர வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Waleboda) அண்மையில் கவலை வெளியிட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக மேன்முறையீடுகள் கோரப்பட்டதாக கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் காமினி வலேபொட சுட்டிக்காட்டியிருந்தார்.
விண்ணப்பித்த 200,000 மாணவர்கள்
நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதுவரை மீள் திருத்தப் பெறுபேறுகளை வெளியிடவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மறுபரிசீலனைக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த சுமார் 200,000 மாணவர்கள் இறுதிப் பெறுபேறுகளுக்காகக் காத்திருப்பதால் உயர்தரப் பாடப் பிரிவுத் தேர்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
எனவே மீள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கல்வி அமைச்சரிடம் வலேபொட கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |