மிகச் சிறப்பாக இடம்பெற்ற ஒட்டுசுட்டான் திருவேட்டை உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டு மகோற்சவத்தின் 13 ஆவது உற்சவமான திருவேட்டை உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்திலிருந்து வேட்டைக்காக புறப்பட்ட எம்பெருமான் வழமையான வீதிகள் ஊடாக சென்று வேட்டையாடி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தார்.
இதன்போது பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்று இரவு பூஜைகளும் இடம்பெற்றிருந்தது.
வேட்டையாடும் உற்சவம்
இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களுக்காக வேடுவ வேடம் அணிந்து வேட்டையாடும் அந்த உற்சவத்தில் கலந்து கொண்டதோடு வீதிகளெங்கும் எம்பெருமானுக்கு கும்பங்கள் வைத்து மக்கள் வரவேற்று இருந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025 மகோற்சவம் கடந்த மாதம் ஆரம்பமாகி நேற்று முன்தினம் (07) வேட்டை திருவிழாவும் நேற்று (08) சப்பற திருவிழாவும் இன்று (09) தேர்த் திருவிழாவும் நாளை (10) தீர்த்த திருவிழாவோடு உற்சவம் நிறைவு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








