ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு - வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சாடல்!
தமிழர் விவகாரத்தில் கடந்தகால ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரலையே அநுரவின் (Anura Kumara Dissanayake) அரசு தொடர்கிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (10.10.2024) அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போன்ற தோற்றப்பாடுகளை காட்டினாலும் தமிழர் விவகாரத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த நிகழ்ச்சி நிரல்களை தொடர்வதாகவே அநுர அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
நாடாளுமன்ற ஆட்சி
எனவே தமிழர்களை பொறுத்த வரை ஆட்சி மாற்றம் அல்ல ஆள் மாற்றமே தென்னிலங்கையில் ஏற்பட்டதாக உணர முடிகின்றது.
ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் அநுர அரசு நாடாளுமன்ற ஆட்சியை கைப்பற்றினால் ஊழல்வாதிகளை தண்டிக்க வாய்ப்பில்லை காரணம் தமிழின அழிப்புக்கும் ஊழலுக்கும் ஒரே தரப்புத் தான் கடந்த காலத்தில் காரணமாக இருந்தனர்.
உள்ளக பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட விடயம் அத்துடன் உள்ளக பொறிமுறை மூலம் நீதி வழங்குதல் அல்லது விசாரணை என்பது ஏமாற்று நாடகம்.
எதிர்காலத்தில் விசாரணை
யுத்தக் குற்ற ஆதாரங்கள் சேகரித்தல் விடையத்தை நிராகரிப்பதாக விஜித ஹேரத் (Vijitha Herath) கூறுவது ஏன்? ராஜபக்ச அரசு போல அநுர அரசும் அச்சம் கொள்வதற்கான காரணம் என்ன?
இறுதி யுத்தத்திற்கு சகல வழிகளிலும் முழுமையான ஆதரவை ராஜபக்ச அரசுக்குள் மறைந்திருந்து வழங்கியதன் மூலம் யுத்தக் குற்ற ஆதாரங்கள் எதிர்காலத்தில் விசாரணைக்கு வருமாயின் தங்களுக்கும் பாதகமாக அமைந்துவிடும்.
என்ற நோக்கில் முன்னைய ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரலை தொடர்கின்றனர். எனவே ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு எதுவித மாற்றங்களையும் செய்ய மாட்டாது என்பதை ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கும் செயல் கட்டியம் கூறுகின்றது. என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |