பாரவூர்தி - உந்துருளி மோதி கோர விபத்து - கடற்படை வீரர் பலி..!
புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற பரவூர்தியுடன், புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிச் சென்ற உந்துருளியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று (13) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளி ஓட்டிச் சென்ற தம்பபண்ணி கடற்படை முகாமில் பணி புரியும் கடற்படை வீரரொருவர் இவ்விபத்தின்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கடற்படை வீரர்
அவர் குருணாகல், வாரியபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதான கே.எம் சந்தன பெரேரா என்கிற கடற்படை வீரர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த கடற்படை வீரர் நேற்றிரவு கடமையை முடித்துவிட்டு, இன்று அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.
உந்துருளியை ஓட்டிச் சென்றபோது கடற்படை வீரருக்கு ஏற்பட்ட தூக்கத்தினால் கவனம் சிதறி, அவர் பரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்தினால் காயங்களுக்குள்ளான பாரவூர்தி சாரதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
