நிகழ்நிலை காப்பு சட்டம்: சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் சுமந்திரன்..!
சிறிலங்கா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், வாசிக்கத் தெரியாத மற்றும் எழுத்தறிவு அற்றவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விமர்சித்துள்ளார்.
இதன் காரணமாக, உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இன்று(23) நடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் தொடர்பாடல் துறையை மையப்படுத்திய பாரிய மாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ள சட்டம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படுகிறது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்
எனினும், இந்த சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான பொது இணக்கப்பாடு இந்த நாடாளுமன்றத்தில் இல்லை. இன்று காலை சபாநாயகருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, நாம் எமது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்தோம்.
இதற்கமைய, கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. எனினும் தற்போது நடைபெறும் இந்த விவாதம் சட்ட விரோதமானது.
நிலையியற் கட்டளைகளுக்கு எதிராக இந்த விவாதம் நடத்தப்படுகிறது. துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும்.
இன்றைய நாடாளுமன்ற விவாதம்
குறித்த குழுவின் அறிக்கை கிடைக்காத சில சநதர்ப்பங்களில், நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் விவாதங்கள் நடத்தப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த பின்னணியில், குறித்த சட்டமூலம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென வாக்களித்தவர்களில் அதிகளவானோர் வாசிக்க தெரியாதவர்கள்.
இது சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எழுத்தறிவை பிரதிபலிக்கிறது. இதனை முழு இலங்கை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |