கனடாவில் வேலை வாய்ப்பு மோசடி குறித்து அவசர எச்சரிக்கை
கனடாவில் (Canada) வேலைவாய்ப்புகளை வழங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் மோசடி தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவை (Ontario) சேர்ந்த இருவர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் கிடைத்த போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி மொத்தம் 80000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ள சம்பவங்கள் வெளியாகி உள்ளன.
டொரோன்டோவைச் சேர்ந்த கிரேக் பெர்கோஸ், அண்மையில் 11,000 டொலர் இழந்துள்ளார்.
சமூக ஊடக விளம்பரம்
பணியை இழந்த பின் மருத்துவ செலவுகளால் பாதிக்கப்பட்ட பெர்கோஸ், ஒரு சமூக ஊடக விளம்பரத்தில் "பகுதி நேர வேலைக்கு பணம் தருகிறோம்" என்ற விளம்பரத்தைக் கண்டு தொடர்பு கொண்டார்.
அதன்படி அவர் ஒரு TikTok Shop கணக்கை தொடக்குமாறு கூறப்பட்டு, முதலீட்டு பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்ய பணம் செலுத்த வேண்டும் என்றும் பின்னர் தரகு கிடைக்கும் என்றும் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பின்னர் அது முழு மோசடி என்பது தெரியவந்துள்ளதாகத் பெர்கோஸ் தெரிவிக்கின்றார். ஒஷாவாவைச் சேர்ந்த மரியா என்ற மற்றொரு பெண்ணும் 70,000 டொலர் பணத்தை இழந்துள்ளார்.
மோசடியாக இருக்கலாம்
இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய வேலை வாய்ப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்புகள் மற்றும் எளிய பணிக்கே அதிக ஊதியம் அளிக்கப்படும் எனும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பணம் அனுப்பும் போது கவனமாக இருக்கவும் பணம் சம்பாதிக்கவே பணம் செலுத்துமாறு கூறினால் அது மோசடியாக இருக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
