இந்தியாவுக்கு உறுதியளித்த அமெரிக்க உளவுப் பிரிவு: நிர்க்கதியாகும் பாகிஸ்தான்!
பயங்கரவாதிகளை வேட்டையாடும் முயற்சிகளில் இந்திய பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் டுள்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் "இந்தக் கொடூரமான தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்" என்று பிரதமர் மோடிக்கு அவர் கூறியுள்ளார்.
இராணுவத் தாக்குதல்
பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர ரீதியாக பல தண்டனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, மோடி, பயங்கரவாதிகளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் "உலகின் இறுதி வரை" வேட்டையாடி, "அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில்" தண்டிப்பதாக சபதம் செய்துள்ளார்.
இந்த நிலையில், இராணுவத் தாக்குதல் நடக்கக்கூடும் என்று பீதியடைந்த பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் எல்லைப் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், இந்தியாவின் நடவடிக்கைக்கு பயந்து பாகிஸ்தான் 24 மணி நேரமும் வான்வழி உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளின் கண்டனங்கள்
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரான்ஸ் பிரதமர் மக்ரோன் மற்றும் இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தங்கள் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில், தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும் பிரதமர் மோடியின் முயற்சிகளை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சவுதி, டுபாய், ஈரான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன.
அத்தோடு, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இலங்கை மற்றும் பல நாடுகளின் தலைவர்களும் இந்த சம்பவம் குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்திய மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தங்கள் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
