மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை
மியன்மாரில் (Myanmar) சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunaratne), மியன்மார் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
4வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மியன்மார் சென்றிருந்த வேளையில் அந்நாட்டு பிரதமர் மின் ஆங் ஹ்லைங்கை (Min Aung Hlaing) அவரது அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளர் சந்தித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அங்குள்ள இலங்கையர்களை மீட்பதற்கு உதவுமாறு பாதுகாப்புச் செயலாளர் மியன்மார் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராஜதந்திர உறவுகள்
அத்துடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமது மியன்மார் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இதன்போது பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, இராஜதந்திர உறவுகள் மற்றும் மத விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு பிரமுகர்களும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பயிற்சியாளர்களை பரிமாறிக்கொள்வது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |