சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவருக்கு அரச குழுக்களில் கட்டுப்பாடு
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழுக் கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்பவோ முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் இந்தத் தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்த நிலையில், கூட்டம் தொடர்பான தகவல்களை எதிர்கட்சித் தலைவருக்கு வழங்க குழுவின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் கூட்டம்

அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து, கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்றிருந்தார்.
எனினும் இதன்போது எதிர்கட்சித் தலைவர் என்ற வகையில் தமக்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சஜித் பிரேமதாச மாத்திரமல்லாமல், எதிர்கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் கடந்த மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவலகள் பற்றிய குழுக் கூட்டத்திலும் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலும் தமது கவனத்திற்கு கொண்டுவந்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு தம்மிடம் கோரியதன் அடிப்படையில், அது தொடர்பான நிலையியல் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற மரபுகள் குறித்து தாம் ஆராய்ந்ததாக மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
அதற்கமைய, நாடாளுமன்ற சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நாடாளுமன்ற கட்டமைப்புக்குள் சிறப்புரிமைகள் காணப்படுவதனாலும், இந்தப் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு குழுக்களின் அலுவல்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஒரு பரந்த இடம் இருப்பதன் அடிப்படையிலும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு நிலையியல் கட்டளைகளின் பிரகாரம், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாலும், இவ்வாறான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது மேலே குறிப்பிடப்பட்ட பொறுப்பான பதவி வகிப்பவர்களை அழைப்பது பொருத்தமற்றது என மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உள்நாட்டு கடன் சீரமைப்பு குறித்து அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும் நோக்கில் தாம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கு கடன் மறுசீரமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அறிந்து கொள்ளவே தாம் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
கடும் தொனியில் பேசிய சஜித்

அரசாங்க அதிகாரிகள் தமது கேள்விக்கு பதில் அளிக்க தவறினால் அது தனது சிறப்புரிமையை மீறுவதாக அமையும் எனவும் அவ்வாறு சிறப்புரிமை மீறப்பட்டால் அதற்கு சபாநாயகர் பொறுப்புகூற வேண்டும் எனவும் சஜித் சுட்டி காட்டியுள்ளார்.
இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான குழு அமைத்து அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்பப் போவதாக சஜித் கடும் தொனியில் சபாநாயகரிடம் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, குறித்த கூட்டத்தின் தகவல்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் குழுவின் தலைவரினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்