புதிய பிரதமர் ரணிலுக்கு எதிர் கட்சிகள் கொடுத்த அதிர்ச்சி! விறுவிறுப்பாகும் கொழும்பு அரசியல்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்க தயார் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயேட்சைக் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன அமைச்சரவை பதவிகளை ஏற்க போவதில்லை என அறிவித்துள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகளை தமது கட்சி நிராகரித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அறிவித்திருந்தார்.
மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் செயற்படுவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் அவ்வாறே தமது முடிவை தெரிவித்துள்ளனர்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்த அவர்கள், அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க பிரதமர் பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதமருக்கு தமது கட்சி எந்த ஆதரவையும் வழங்காது என்று தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் 113 ஆசன ஆதரவு இல்லை என்று கூறிய பண்டார, ரணில் ராஜபக்சேக்கள் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற ஆதரவை மட்டுமே நம்பியிருக்கிறார் என்றார்.
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்தமைக்கான பெரும்பான்மையான பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவின் கைகளிலேயே இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விற்பனை செய்வதும் பேரம் பேசுவதும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மக்கள் விடுதலை முன்னணி அத்தகைய சலுகைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் செயற்படாது என்றும் அனுரகுமார தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயற்படப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.
விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.