கோட்டாபயவின் அழைப்பை அடியோடு நிராகரித்த எதிர்க்கட்சிகள்
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அரச தலைவர் இன்று காலை அழைப்பு விடுத்திருந்தார்.
கோட்டாவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி நடாத்திய தொடர் போராட்டங்களை அடுத்து அரச தலைவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அரச தலைவரது இந்த அழைப்பிற்கு கட்சிகள் தமது மறுப்பை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த அழைப்பை நிராகரித்தது, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் தமது கட்சி ஒருபோதும் ஒப்பந்தம் செய்யவோ அல்லது நிர்வாகத்தை அமைக்கவோ போவதில்லை என்று அதன் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
இதனை தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியும் அரச தலைவரின் இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது, பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து கோட்டா தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அரச தலைவர் விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் இடைக்கால அரசுடன் கை கோர்ப்பதற்க்கான அழைப்பை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இவற்றை விட, தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் அரச தலைவரின் இந்த இடைக்கால அரசிற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
