பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை எதற்கு: அநுரவுக்கு சாணக்கியன் ஆதரவு!
பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகளை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது தற்றுணிபுடன் கூறிய கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு சென்று குறிப்பிட்ட விடயத்துக்கு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனாதிபதி அங்கு குறிப்பிட்ட விடயத்தை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள்.

தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ செல்ல வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வடக்கில் ஒரு விகாரையை பிடித்துக்கொண்டு செய்தவற்றை அனைவரும் அறிவோம். இதற்கு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த குழுவினர் பற்றியே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதை தவிர்த்து சிங்கள மக்கள் வைராக்கியத்துடன் நாக விகாரையை வழிபட செல்கிறார் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி தற்றுணிபுடன் தான் அவ்வாறு குறிப்பிட்டார். ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பேருந்தில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஜனாதிபதி தற்றுணிபுடன் அதற்கு எதிராக பேசினார்.அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கதிர்காமத்துக்கு தமிழர்கள் செல்வது பற்றியும் தற்போது குறிப்பிடப்படுகிறது.
இந்த நாட்டுக்கு பௌத்த மதம் வருவதற்கு முன்னரே கதிர்காம கந்தனை மக்கள் வழிபட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |