கோட்டாபய வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பலை
உயர் கல்வியினை தனியார் மயப்படுத்துவது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசேப் ஸ்டாலின் (Josep Stalin) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவது சிறந்தது என அரச தலைவர் தெரிவித்துள்ள கருத்தானது மிகவும் பாரதூரமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வறுமையில் வாழும் குடும்பங்களின் நிலையினை கல்வியே மாற்றி வருகின்றது. ஆகவே கல்வியினை பாதிக்கும் வகையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையானது எதிர்கால சந்ததியையே பாதித்துவிடும்.
ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டில் உள்ள துறைகைளை இராணுவமயமாக்கி வருகின்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டது, ஆனாலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது போனது.
சுகாதார அமைச்சர்களை மாற்றினார்கள். இதனைவிட பல்வேறு விடயங்களைச் செய்தார்கள். ஆனாலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
உயர் கல்வியினை இராணுவ மயமாக்க கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்தது. தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட ஏற்பாடு கொண்டுவரப்படுமாயின் அதற்கு எதிராக போராட்டம் எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும்.
ஆகவே இது தொடர்பாக அரச தலைவர் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.