அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது - வாசுதேவ நாணயக்கார
அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதால் பயனில்லை என இடதுசாரியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீழ்த்துவதே பிரதான இலக்காக உள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவது வீணானது என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பத்துக்கட்சிகளைக் கொண்ட அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக பத்துக்கட்சிகள் அணியில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரியின் தலைவர் வாசுதேவநாணயக்கார கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதால் பயனில்லை.
ஆளும் தரப்பில் உள்ளவர்களின் இன்னமும் ஐந்தாறு பேரை எமது மக்கள் இணைத்துக்கொண்டால் அரசாங்கம் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்து விடும். ஆகவே அதற்கான முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கின்ற தருணத்தில் புதிய பிரதமர் தலைமையில் ‘தேசிய நிறைவேற்று சபை’ நிறுவப்பட்டு அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும். அந்த தற்காலிக கட்டமைப்பு ஊடாக பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளில் ஈடுபடமுடியும். அதனைத் தவிர்த்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதால் எவ்விதமான பயனுமல்லை.இந்த விடயத்தினை நான் உள்ளிட்ட எமது தரப்பினர் சஜித் பிரேமதாசவுடன் உரையாடி தெரிவித்துள்ளோம்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவார்களாயின், அதற்கு நாம் ஆதரவளிக்க முடியாது. ஆகவே அதுதொடர்பில் எமக்குள் கலந்துரையாடல்களைச் செய்து இறுதி முடிவினை எடுப்போம் என்றார்.
