பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களின் இடமாற்றம் குறித்து எழுந்துள்ள சிக்கல்
சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவின் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையில் 23,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
பல்வேறு தரங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக ஏராளமான கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், இது சுகாதார அமைப்பிற்குள் தேவையற்ற சிக்கல்களை உருவாக்குவதாகவும் அந்த சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வைத்தியல் சமில் விஜேசிங்க (Chamil Wijesinghe) குறிப்பிட்டார்.
ஒருதலைப்பட்சமாகச் செயற்படுதல்
இந்த இடமாற்றங்களுக்கான நடைமுறைகள் நிறுவன வழிகாட்டுதல்களில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தாலும், சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவு ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டதால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதன் விளைவாக, நாட்டில் சுமார் 23,000 மருத்துவர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக இப்போது சிக்கல்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 10,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இடமாற்றங்கள் இன்னும் செயற்படுத்தப்படவில்லை சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் கிட்டத்தட்ட 50 வீதமான மருத்துவர்கள் தற்போது அவர்கள் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
