மோடயாக்கள் யார்...!
மனித உரிமைப் பேரவையால் வீழத்தப்பட்டது என்ற பரபரப்புச் செய்திகளுக்கூடே சிங்கள தேசம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. தமிழர்கள்போன்று தென்னிலங்கையும் நீதி கோரி ஜநா வாசலில் நிற்கின்றது.
சிங்களயோ மோடயோ ( சிங்களவர்கள் முட்டாள்கள் ) என்ற சொற்பதம் தமிழர்களிடையே பிரபல்யமானது.
இடைக்கடையே தமிழர்களின் வாயில் இருந்து வெளிவரும் வார்த்தை இது. சிங்களவர்களிடையே தமிழர்கள் குறித்து ஒரு சொற்பதம் உள்ளது. அதனையும் இங்கு சுட்டிக்காட்டிவிட்டு விடயத்திற்கு வருவோம். தெமலத் ஹரி ஹுத்தரித் ஹரிஅதாவது தமிழர்களும் சரி மலமும் சரி என்பதாகும்.
இங்கு நாம் பேசப் போவது சிங்களயோ மோடயோ என்ற சொற்பதம் குறித்ததாகும். சிங்கள தேசம் மனித உரிமைப் பேரவையால் வீழத்தப்பட்டது என்ற பரபரப்புச் செய்திகளுக்கு ஒவ்வொரு ஜநா மனித உரிமைப்பேரவைக் கூட்டத் தொடர்களின்போதும் பஞ்சம் இருக்காது. இத்தகைய செய்திகள் தாராளமாக கசியவிடப்படும்.
இந்தச் செய்திகள் தமிழ் மக்களிடையே தாராளமாக உலாவரும். தமிழ் மக்கள் நம்பிக்கையின் உச்சத்திற்கே உயர்த்தப்படுவார்கள். இறுதியில் இந்தச் செய்திகளின் மாயைகளில் இருந்து தொப்பென தமிழ் மக்கள் வீசி எறியப்படுவார்கள்.
ஜநா மனித உரிமைப் பேரவை இம்முறையும் தமிழர்களை ஏமாற்றிவிட்டது என்று பிறகு செய்திகள் கசியவிடப்படும். இந்த நிலைமை அடுத்த ஜநா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர்வரை தொடரும். இடையில் தமிழ் மக்களும் இதனை மறந்து தமது வேலைகளில் மூழ்கிவிடுவர்.
இந்தத் தொடர் நிகழ்வுகள் தாயகத்தில் உள்ள தமிழ்த் தலைமைகளுக்கும் புலம்பெயர்தேச அமைப்புக்களுக்கும் ஜநா மனித உரிமைப் பேரவையை இயக்கும் சர்வதேச சக்திகளுக்கும் தேவையான விடயமாக உள்ளது. இறுதியில் சிங்கள தேசம் மனித உரிமைப் பேரவையால் வீழ்த்தப்பட்டது என்ற பரபரப்புச் செய்திகளுக்கும் அப்பால் தலை நிமிர்ந்து நிற்கும்
- இலங்கையின் தமிழ் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகள் தொடரும்.
- தமிழர் தாயகத்தை சிங்கள குடியேற்றம் கொண்டு சிதைக்கும் நிகழ்ச்சி நிரல் எவ்வித தடங்களும் இன்றி நிறைவேறும்.
- பௌத்தமயமாக்கம் மேலும் தீவிரமாகும்.
- தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான அணைத்து விடயங்களும் தாராளமாக நிறைவேற்றப்படும். இதனை கொரனாவாலோ அல்லது இன்று நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியால்கூட தடுத்து நிறுத்திவிட முடியாது.
இது ஜநா மனித உரிமைப்பேரவைக்கும் சர்வதேச சக்திகளுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் தெரியும்.
மலையகமும் விதிவிலக்கல்ல
வடக்குக் கிழக்கில் இந்த நிலை என்றால் மலையகத்திலும் இதே நிலைதான். மலையக மக்களை காணியற்றவர்களாக்கி வேலையற்றவர்களாக்கி வீதியில் வீசிவிடுவதற்கான அணைத்து வேலைத்திட்டங்களும் மிகக் கச்சிதமாக நிறைவேற்றப்படுகின்றன.
தமிழ் இளைஞர்களுக்கு விசுவமடுப்பகுதியில் விவசாயத்திற்கென காணிகள் வழங்கப்பட்டபோது அங்கு சென்ற அபபோதைய அமைச்சரும் முன்னாள் தோட்ட அதிகாரியுமாக இருந்த ரஞ்சன் விஜேரட்ன கூறுகையில் உங்களுக்கு காணியும் தந்து வேலைக்கு ஆட்களையும் நாம் தருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்ட ஆட்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்தான்.
மலையக பிரதிநிதிகள் கோடிகளில் புரண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் தேனிலவு கொண்டாடுகின்றனர்.
மலையகத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் கஸ்டப்பட்டு படித்து மேலெழுந்து கொண்டுவரும் அதேவேளையில் மறுபுறம் கொழும்ப மற்றும் நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் வீடுகள் போன்றவற்றில் வேலைக்கென தோட்டங்களில் இருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மலையக மக்கள் பிரதிநிதிகள் கோடிகளில் புரண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளுடனும் கட்சிகளுடனும் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே சிங்கள தேசத்தின் அடக்கு ஒடுக்குமுறை குறித்த நிகழ்ச்சி நிரல் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரானதாகும்.
இந்த அடக்குமுறைகுறித்து வடக்குக் கிழக்கில் பேசு பொருளாக உள்ளது. மலையகத்தில் பேசப்படுவது குறைவு. பேசப்பட்டாலும் அந்தக் குரல்கள் வீரியம் இன்றி அடங்கிப் போய்விடுகின்றன.
சிங்கள இராஜதந்திரம்
இந்த ஒரு பின்னணியில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவை வீறு கொண்டெழுந்து வீழ்த்திவிடும் என்ற பரபரப்புச் செய்திகளுக்கூடே நல்லாட்சி அரசாங்கம் மனித உரிமைப் பேரவை அரங்கில் நுழைந்து தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன் வரவில்லை என முழங்கி பேரவையின் இணை அனுசரணையாளராகி வென்றது.
மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இன்றைய பிரதமரான தினேஸ் குணவர்தனா பேரவை அரங்கில் நுழைந்து இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
இப்பொழுது உள்ளகப் பொறிமுறையில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி பேரவையில் முழங்கியுள்ளார். நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மீண்டெழ எந்தப் பேயுடனும் சரணாகதி அடைய தயாராக இருக்கும் ஒரு அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் முதலீடு கோரி கையேந்தி நிற்கும் அரசாங்கம் தமிழர் விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தி நிற்கின்றது. மறுபுறம் இது நிங்கள பௌத்த நாடு என கர்ச்சித்தும் நிற்கின்றது.
ஜநா மனித உரிமை பேரவையின் அகன்ற போக்கு. அண்மைக் காலமாக தமிழர்கள்போன்று தென்னிலங்கையும் நீதி கோரி ஜநா வாசலில் நிற்கின்றது. இதனால் ஜநா மனித உரிமை பேரவை இலங்கை குறித்து தமிழர் விவகாரத்துடன் காலத்துக்குக் காலம் இலங்கையின் கள நிலவரங்களில் இருந்து பல்வேறு விவகாரங்களை தனது நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்ளடக்கிக் கொண்டு அகல கால் வைத்துக் கொண்டு போகின்றது.
- உயிர்த்த ஞாயிறுபற்றி தனது நிகழ்ச்சி நிரல்களுக்குள் எடுத்துக் கொண்டது.
- பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்தும் இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றது.
- இப்பொழுது அரகல போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களின் விடுதலை குறித்தும் பேசுகின்றது.
- ஊழல்மிக்க அரச அதிகாரிகளுக்கு எதிராக சுயாதீன பக்கச் சார்பற்ற வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தி தண்டனை வழங்குதல் பற்றிக் கூறுகின்றது.
- உள் நாட்டுப் பொறிமுறையில் சுயாதீனத்தன்மை வெளிப்படைத் தன்மை இல்லாமையினால் மனித உரிமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தப்படுகின்றமையினால் மனித உரிமைகள் இழிவுபடுத்தப்படுகின்றது என்று கரிசனை காட்டுகின்றது.
- இராணுவமயமாக்கல்பற்றி சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு செவி சாய்க்காமைபற்றி குரல் எழுப்புகின்றது.
- ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள்அச்சுறுத்தப்படுகின்றமைகுறித்தும் போசுகின்றது.
- மனித உரிமை மீறல்கள் அறவழிப் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம்குறித்தும் கவனம் செலுத்துகின்றது.
- இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்தும் பேசுகின்றது.
- அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கி மஹிந்த ராஜபக்சக்களின் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான நிகழ்ச்சிநிரலையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
அதாவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான ராஜபக்ஷக்களின் அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் உள்ளடக்கிப் பயணிக்கின்றது. மொத்தத்தில் அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப இந்த நாடுகள் ஜநா மனித உரிமை பேரவையை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த மனித உரிமைப் பேரவையில் நம்பிக்கை வைத்த தமிழ் மக்கள் இலவு காத்த கிளியாகவிரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். அதாவது ஜநா மனித உரிமைப் பேரவையில் தமிழர் விவகாரம் பத்துடன் பதினொன்ராக உள்ளது என்று கூறுவதே சாலப் பொருந்தும்.
ஜநாவில் இலங்கைக்கு எதிராக கோப்புகள் அதிகரித்துக் கொண்டிருந்தபோதும் இலங்கை இவைகளுக்கு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
அப்படியானால் யார் மோடயர்கள் ?
மோட்டுச் சிங்களவர்கள் என தமிழர்கள் கூறுவது உண்மையா? சந்திரிகா அம்மையார் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களிடையே பிரபலமாக பேசப்பட்ட வார்த்தை இது.
இந்த மோட்டுச் சிங்களவர்கள்தான் இந்தியா உற்பட சர்வதேசநாடுகளுக்கும் தமது ராஜதந்நிர நகர்வுகளின்மூலம்இடியப்பம் தீத்திக் கொண்டிருக்கின்றனர்.
சிங்கள ராஜதந்திரத்தின் முன் இந்த நாடுகளின் ராஜதந்திரம் தோற்றுப்போய் நின்ற பல பதிவுகளை உலக அரங்கில் இலங்கை பதிவு செய்துள்ளது. இதற்குள் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இலங்கை குறித்த இந்திய ராஜதந்திரம் தோற்றுப் போனதன் விளைவு இந்தியா பக்கம் இன்று தமிழர்களும் இல்லை சிங்களவர்களும் இல்லை.
இலங்கை அரசாங்கமும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. உண்மையில் மோடயாக்கள் தமிழர்கள்தான். குறிப்பாக தமிழ்த் தலைமைகளும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுமாகும்.
தமக்கிடையே ஒற்றுமை இன்மையால் தமிழினத்தின் வீடுதலை நோக்கிய பயணத்தை தடுத்து நிற்கும் தடைக்கற்களாகவும் இந்தத் தமிழ்த் தலைமைகள் நிற்கின்றனர்.
சேர். போன் இராமநாதன் சேர்.பொன் அருணாச்சலம் ஜிஜி.பொன்னம்பலம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முதலாக இன்றைய தமிழ்த் தலைமைகள்வரை சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் தோற்றுப்போய் நிற்பவர்களே!. 'சிங்களயோ மோடயா' என தமிழர் தரப்பால் கூறப்பட்டவர்கள்தான் இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் என ஒட்டு மொத்த தமிழ்த் தலைமைகளையே தோற்கடித்து முட்டாள்களாக்கி நிற்கின்றனர்.
ஆனால் தமிழ்த் தலைமைகள் இந்தத் தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றதாக இல்லை.
இந்தத் தமிழ்த் தலைமைத்துவங்கள் சிங்கள ஆட்சியாளர்களின் கைக் குழந்தையாக அல்லது கைக் கூலிகளாக செயற்படுவதாக தமிழ் இளைஞர்கள் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
மொத்தத்தில் இந்தத் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இயங்க முன்வரவேண்டும்.
இல்லையேல் தமிழ்மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிவில் சமூகங்களுடன் இணைந்து புதிய தலைமையை நோக்கி நகர்வதன் மூலமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். தமிழினத்தின் தலை விதியை தீர்மானிக்க முடியும்.
எல்லாமே தமிழ் மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது. தமிழ் மக்கள் இன்று தாமே பாதை வெட்டிப் பயணம் போக வேண்டிய நிலையில் உள்ளனர்.
