3 கிரிக்கெட் வீரர்களை பலியெடுத்த பாகிஸ்தான்...! கட்டாரிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் (Pakistan) உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கட்டார் அறிவித்துள்ளது.
குறித்த தகவலை கட்டார் வெளியுறவு அமைச்சகம் இன்று (19.10.2025) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
வான்வழித் தாக்குதல்
ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, நேற்று ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் (Pakistan) எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலின் போது கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) ஆகிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அமைதி முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
உடனடி போர்நிறுத்தம்
பதட்டம் அதிகரித்த நிலையில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் எனக் கட்டார் அழைப்பு விடுத்து இருந்தது.
பின்னர், எல்லை வன்முறையை நிறுத்துதல் மற்றும் எல்லையில் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் டோஹா பேச்சு நடந்தது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கட்டார் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இதில், பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கட்டார் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
