இலங்கைக்கு முழுமையான ஆதரவு!! பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிமொழி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாகிஸ்தான் அரசாங்கம் முழு ஆதரவை வழங்குவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கி தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் அலுவலகத்தில் சந்திப்பு
அரச தலைவர் அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகர் உமர் புர்க்கி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் இதனை உறுதியளித்தார்.

அரசியல், கைத்தொழில், கலாசாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகளின் வழியே இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இலங்கை தனது நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விரைவில் மீளும் என நம்புவதாக உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மனிதாபிமான உதவிகள், குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இலங்கை மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்க உதவித்தொகை மற்றும் புலமைப்பரிசில்களை வழங்குதல் போன்ற உதவிகளுக்காக உயர்ஸ்தானிகருக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.