பொருளாதார மீட்பிற்கான நிதி உத்தரவாதங்களை வழங்க பாரிஸ் கிளப் தயார்
பொருளாதார மீட்பிற்கான நிதி உத்தரவாதங்களை வழங்க பாரிஸ் கிளப் தயாராக உள்ளதாக கடன் பேச்சுக்களுடன் தொடர்புபட்ட தரப்பினரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம் கடன் மறுசீரமைப்புக்கான தனது ஆதரவை பாரிஸ் கிளப் விரைவில் அறிவிக்கவுள்ளதாக இரண்டு தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனை பெறுவதற்கான நிதி உத்தரவாதம்
அதிகரித்துவரும் பணவீக்கம், மந்தநிலை மற்றும் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றில் சிக்கித் தவிக்கும் இலங்கை, கடந்த செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியிருந்தது.
எனினும் நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு கடன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பதாக முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதி உத்தரவாதத்தை கோரியுள்ளது.
இலங்கையின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 122 சதவீதமாக உள்ளதுடன், இதில் 70 வீதம் வெளிநாட்டு நாணயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கான நிதி உத்தரவாதத்தை பாரிஸ் கிளப் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுக்கள் பிரத்தியேகமானவை என்பதால், தகவல் வழங்கிய அதிகாரி தமது பெயரை குறிப்பிட வேண்டாம் என கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய கடன் திட்டம்
சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் அல்லாத தரப்பினரே இலங்கையின் முக்கியமான இருதரப்பு கடன் வழங்குநர்களாக உள்ளதாகவும் பாரிஸ் கிளப் உத்தரவாதம் சீனாவை நம்பியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தவிர மற்ற பாரிஸ் கிளப் அல்லாத தரப்பினரின் நிதி உத்தரவாதத்தை பெற்றுள்ளதாக மற்றுமொரு தகவல் மூலம் கூறியுள்ள போதிலும், மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா இணங்கியுள்ளதுடன், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியும் கடனை செலுத்துவதற்கு இரண்டு வருடகால அவகாசத்தை வழங்கியுள்ளது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெறுவதற்கு சீனா வழங்கிய உத்தரவாதம் போதிய அளவில் இல்லை என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்