இலங்கையுடன் கைகோர்க்கத் தயார் - உலகின் முன்னணி கடன் வழங்கும் குழு அறிவிப்பு
இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு செயன்முறை
பாரிய கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பாரிஸ் கிளப், இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
பாரிஸ் கிளப் அல்லாத உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைத்து தேவையான நிதி உத்தரவாதங்களை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் இலங்கையின் கடன் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை உறுதி செய்வதற்கும் தாம் தயாராக உள்ளதாக அந்தக் குழு கூறியுள்ளது.
இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 48 மாத ஏற்பாட்டாக, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் எட்டப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையையும் பாரிஸ் கிளப் வரவேற்றுள்ளது.
இலங்கை - சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கையானது பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் குறித்து மேலும் விவாதிப்பதானது இலங்கை அதிகாரிகள் மற்றும் பாரிஸ் கிளப் அல்லாத அதிகாரப்பூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களின் கைகளிலேயே உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கடன் வழங்கும் நாடுகளின் முறைசாரா குழுவான பாரிஸ் கிளப், 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன், கடன் பெற்ற நாடுகள் எதிர்நோக்கும் பணம் செலுத்தும் சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கு பங்களிப்பு வழங்கி வருகின்றது.
