சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பலவந்தமான முறையில் உதவ முன்வரவில்லை..!
சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைக்காக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே தீர்வு
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " மின்கட்டண அதிகரிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு சேவை கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலக்கரி மற்றும் தொடர்ந்து சேவை மறுசீரமைக்கப்பட்ட போது சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றன. இருப்பினும் அத்துறைகள் மறுசீரமைக்கப்பட்டன. உரிய காலத்தில் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத்தியாவசியமானது.
வாழ்க்கை செலவு அதகரிப்பினால் நாட்டு மக்கள் குறிப்பாக வறுமை கோட்டில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்னகள். ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனைகளை சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் முன்வைத்துள்ளன.
சிறிலங்கன் விமான சேவையின் நட்டம்
வாழ்வில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் சிறிலங்கன் விமான சேவையின் நட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இடம்பெறும் பேச்சுவார்த்தை தொடர்பில் அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பலவந்தமான முறையில் ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் தேவை இலங்கைக்கு உள்ளது. ஆகவே நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை செயற்படுத்த வேண்டும்.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் தொடர்ந்து நடத்தர மக்களை நெருக்குள்ளாக்குவது நியாயமற்றது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காவிடின் நாட்டு மக்களுக்கான அடிப்படை நலன்புரி சேவைகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கை மின்சார சபையில் உள்ள ஒரு சில பொறியியலாளர்கள் மற்றும் டீசல் மாபியாக்கல் தங்களின் குறுகிய நலனுக்காக புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டத்திற்கு எதிராக செயற்பட்டார்கள், தொடர்ந்து செயற்படுகிறார்கள்", எனக் குறிப்பிட்டார்.