கடும் பாதுகாப்புடன் கூடுகிறது இன்று நாடாளுமன்றம்!
நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடுகின்ற நிலையில் அதன் வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மையை காண்பிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயாராகவுள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று தெரிவித்திருந்தார்.
ஆளும் கட்சிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டிருந்தார்.
ஆளும் கட்சியை அங்கத்துவப்படுத்தும் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்த கருத்தின் பின்னணியில் அரச தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இலங்கை முழுவதும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் இன்றய நாடாளுமன்றம் பாரிய அளவில் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
