தங்க கடத்தல் எம்.பிக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை - எதிர்க்கட்சி தலைவர் கேள்வி
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (6) கேள்வி எழுப்பியுள்ளார்.
4.611 கிலோ தங்கத்தை (80 மில்லியன் பெறுமதி) கொண்டு வந்த நபருக்கு 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதனை செலுத்த முடியாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும்,740 இலட்சம் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் விளைவா?
அத்தோடு, போராட்டத்தின் விளைவா இது என கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தில் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் குடிமகனுக்கு ஒரு கவனிப்பும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு கவனிப்பும் நடைமுறைப்படுத்துவது முறை மாற்றமா எனவும், இதற்கு என்ன காரணம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, இதற்குப் பின்னால் இருக்கும் மறை கரம் யாது? என கேள்வி எழுப்புவதாகவும், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
