சாகர காரியவசம் தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு நியமனம்
சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு நாடாளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிக்கும் வகையில் நாடாளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சாகர காரியவசம் தலைமையிலான இந்த குழுவில் பவித்ராதேவி வன்னிஆரச்சி, டி.வீ. சானக, விஜித ஹேரத், மஹிந்தானந்த அலுத்கமகே, எரான் விக்கிரமரத்ன, அஸோக அபேசிங்ஹ, சாணக்கியன், ஜயந்த கெட்டகொட, உள்ளிட்ட பலர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
ஒழுங்குப் பிரச்சினை
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான, லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க எதிர்க்கட்சியினரே முதலில் யோசனையை முன்வைத்ததாகவும், இந்த நிலையில், ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரை இதற்கு தலைவராக நியமித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இது திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்கும் கதையைப் போன்றது என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே இந்த தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் இதற்கான பெயர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.