சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்! விரைந்து செயற்படுங்கள் - அரசாங்கத்திடம் பிரதான பங்காளி கோரிக்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொடர்ந்தும் தாமதிக்காது நடத்துவது சம்பந்தமாக கலந்துரையாடவும் நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வுகாணவும் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துமாறு அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது 15 தீர்மானங்களை அகில இலங்கை செயற்குழு நிறைவேற்றியுள்ளது. மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்காக தாமதமின்றி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது அதில் ஒரு தீர்மானமாகும்.
அரசியல் பேதங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்து விட்டு, சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு நெருக்கடிகள் சம்பந்தமாக கலந்துரையாடி அவற்றை முகாமைத்துவம் செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அதற்காக அனைத்து கட்சிகளும் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் . இந்த குழு ஒரு கால வரையறைக்குள் செயற்பட்டு, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்று காரணம் அல்ல. இதனால், பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு.
சட்டத்தின் ஆளுமை தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கவும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையின் மதிப்பை அதிகரிக்கவும் நாட்டின் பல பிரதேசங்களில் நடக்கும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
