எமது கருத்து கணக்கில் எடுக்கப்படுவதில்லை - அரசு மீது பங்காளிக் கட்சி கடும் அதிருப்தி
கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவது தொடர்பில் நாம் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என அரசின் பங்காளிக் கட்சி ஒன்று வேதனையுடன் தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியான லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தற்போது மீண்டும். அமுல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டது. எனினும் அது முழுமையாக சாத்தியப்படவில்லை.
மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் கொவிட் -19 வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார்கள். ஏப்ரல் மாதம் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தாமலிருந்திருந்தால் தற்போதைய நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
நாட்டு மக்கள் உயிருடன் இருந்தால் தான் பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும். என்பதை பல முறை எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும் எமது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரிய நேரத்தில் எடுக்கப்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.
நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களின் அருமையை உங்களின் குடும்பத்தார் மாத்திரமே அறிவார்கள். ஆகவே இயலுமான அளவு சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். என்றார்.