திருமலையில் மைதானத்தில் எரிக்கப்படும் பிக்குவின் உடல்! மக்கள் கடும் எதிர்ப்பு
திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இறந்த பௌத்த மதகுருவின் உடலை எரிப்பதற்கு மீண்டும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
திருகோணமலை கோகண்ண ராஜமஹா விகாரையின் தலைமை பிக்குவாக பணியாற்றிய பூஜ்யபாத புத்தே தம்மாலங்கார நாயக்க தேரர் தனது 91வது வயதில் நேற்றுமுன்தினம் (29) காலமாகியிருந்தார்.
அவரின் இறுதிக்கிரியைகள் இன்று(31) சனிக்கிழமை இடம்பெற்று திருகோணமலை மக்கெய்சர் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் மதியமளவில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயானமாகும் மைதானம்
இதற்கான இடத்தினை நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) பௌத்த பிக்குகள், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும், திணைக்களங்களும் பார்வையிட்டிருந்ததோடு இதைத்தான் இறுதியாக எரிப்போம் எனவும் இனி இங்கு எரிக்க மாட்டோம் எனவும் தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில், விளையாடுகின்ற குறித்த மைதானத்தில் இறந்த உடல்களை எரித்து மைதானத்தை மயானமாக்க வேண்டாமென பலர் கோரிக்கை விடுத்து வருவதோடு இன முறுகல் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக தமது எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் எதிர்ப்பு
குறித்த மைதானத்தின் பகுதியில் சில ஆண்டு கால இடைவெளியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ச்சியாக பௌத்த பிக்குகளின் உடல்கள் எரிக்கப்பட்டு வந்துள்ளன.

அந்தவகையில் 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீ போதிராஜ விகாரையின் விகாராதிபதியாக இருந்த வென். தேவாலகம தம்மரத்ன தேரர், 2021ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயசுமனாராம விகாரையின் விகாராதிபதியும், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி தெய்யன்னேவெல பஞ்சசீல தேரர் ஆகியோரின் உடல்களானது தமிழ் மக்களில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மைதானத்தில் வைத்து எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |