கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் தொடரும் நிர்வாக செயற்பாடுகளில் அத்துமீறிய தலையீடுகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
பிரதேச செயலக முன்றலில் அனைத்து சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்று (25) காலை முதல் ஆரம்பமான போராட்டம் இன்று (26) இரண்டாவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமைகளை திட்டமிடப்பட்டு ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை
இந்த நிலையில் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை வழங்கும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் எனவும், இப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 17.107 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும், 36, 346 சனத்தொகையினையும், 23,217 வாக்காளர் எண்ணிக்கையையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகம் ஆகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனது சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.
கல்முனை தமிழ் பிரிவு
அது ஸ்தாபிக்கப்படும் போது "கரைவாகு வடக்கு (தமிழ்) பிரிவு என குறிப்பிடப்பட்டது. தற்போது "கல்முனை வடக்கு" எனவும் சில இடங்களில் "கல்முனை தமிழ் பிரிவு" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு 1989/04/06 ஆம் ஆண்டுகளில் வி.அழகரட்டணம், பின்னர் 1991/04/30 ஆம் திகதி கே.பாலசிங்கம், பின்னர் எஸ். அருண்ராசா ஆகியோர் உதவி அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதேவேளை உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 1993/03/17ஆம் திகதி மற்றும் 1993/03/31ஆம் திகதி அமைச்சரவை மசோதாக்களின் ஊடாக இலங்கையில் காணப்படும் சில உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் மற்றும் உப அலுவலகங்களை பிரதேச செயலகங்களாக மாற்றுவதற்காக முன்மொழியப்பட்டது. அதில் கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரிவு) உள்ளடக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில்
அமைச்சரவை உப பிரிவுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 1993/07/09ஆம் திகதி அறிக்கையின் அடிப்படையில் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு உள்ளடங்கலாக 28 பிரதேச செயலக பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு 1993/07/28 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.
1993/07/28ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவை அலுவலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் 1993/08/04 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் அன்றிலிருந்து இன்று வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனித்துவமான பிரதேச செயலகமாக தொழிற்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, அம்பாறை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதன் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதியில் கல்முனை தலைமையக காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |