எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை புனரமைக்கும் மக்கள்(படங்கள்)
எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஹுனுப்பிட்டியவில் தங்கியிருந்த வீட்டை ஹுனுப்பிட்டிய பிரதேசவாசிகளும் கம்பஹா மாவட்ட மக்களும் இணைந்து இன்று (29) காலை புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
அவரது வீடு முற்றாக எரிந்து நாசமாகிய நிலையில், இம்மக்கள் தாமாக முன்வந்து அழிந்த வீட்டை மீண்டும் கட்டும் பணியை ஆரம்பித்தனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்களின் பங்குபற்றலுடன் மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் வீட்டின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் பெருமளவான மக்கள் நிதி மற்றும் உழைப்பு மற்றும் தேவையான பொருட்களை வழங்க முன்வந்தனர்.
புனரமைக்கும் மக்கள்
பிரசன்ன ரணவீரவின் வீட்டைக் கட்டி எழுப்புவதன் மூலம் வன்முறை அரசியல் கலாசாரத்தை தலைகீழாக மாற்றுவதற்கு சமூகத்திற்கும் நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழத் தயார் என நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பிரசன்ன ரணவீர மக்களுடன் நெருக்கமாக செயற்படுபவர் எனவும் மக்களின் ஆதரவுடன் வீடு நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாசங்கத்தினர், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
