பேராதனை பல்கலைக்கழக மாணவன் மாயம் - தாயாரின் வாக்குமூலம்
வாக்குமூலம்
பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகன் காணாமல் போனமைக்கான காரணம் எதுவும் தனக்கு தெரியாது என தாயார் காவல்துறையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவரின் தாயார் பேராதனை காவல்துறையினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் கடந்த 02ம் திகதி இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவரின் தாயார்
இவர் கணேமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். மாணவரின் தாயார் கடந்த 03ம் திகதி பேராதனை காவல்துறையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தனக்கு தெரிந்தவரையில், தனது மகன் காணாமல் போனமைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்தார்.
அவருக்கு காதலி இருக்கிறாரா என்று தெரியவில்லை. தனது மகன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தனக்கு தெரியாது என்றும் தாய் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், நிலைமையை தாங்க முடியாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் காணாமல் போன மாணவன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம் மூலம் விசாரணை
இந்நிலையில், மகனைக் கண்டுபிடிக்க உதவுமாறு தாயார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாணவன் காணாமல் போனமை தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இந்த விசாரணைகளுக்கு நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளதாக காவல் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
