பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முக்கிய பேச்சு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எழுவர் மீதான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுடைய இளமைக் காலம் முழுவதையும் சிறையிலேயே இவர்கள் கழித்துவருகிறார்கள்.
எழுவர் விடுதலை செய்ய தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து சட்ட ரீதியான போராட்டங்கள் தற்போதுவரை நடைபெற்றுவருகிறது.
எழுவர் விடுதலை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலைச் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகவும் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் இருந்தார். பின்னர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வராகக் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
