விவசாயிகள் தொடர்பில் சிறீதரன் எம்.பி விடுத்த கோரிக்கை
யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்ற குழுத் தலைவராக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் சார்ந்து, அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலி மற்றும் பத்தைமேனி பிரதேச விவசாயிகளுடன் நடைபெற்ற சந்திப்பை மேற்கோள்காட்டி அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் சார்ந்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெயங்காயம், உருளைக்கிழங்கு, திராட்சை, கரட், கரணைக்கிழங்கு, பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு, தீவகம், தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின் பேரூர்களில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து, அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை.
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலநிலைப் பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதையும், கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு கிடைக்கப்பெறவில்லை என்பதையும், இத்தகைய காரணிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
