கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதி - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கிராஞ்சி கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஆய்வுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றையதினம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை வழங்கி வைத்துள்ளார்.
கிராஞ்சி பகுதியில் குறித்த கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி
முதற்கட்டமாக கிராஞ்சி பகுதியில் 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வின் பின்னர் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டைப் பண்ணைகளுக்கு மேலும் 127 கடற்றொழிலாளர்கள் கிராஞ்சி பகுதியில் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கும் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், அனைத்து தொழில் முறைகளும் சட்ட ரீதியானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய கடற்றொழில் அமைச்சர், இலவன்குடா போன்ற பல்வேறு பகுதிகளில் பட்டி வலைகள் உட்பட சில சட்ட விரோத கடற்தொழில் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்தத் தொழில் முறையை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் நலன் கருதி இவ்வாறான செயல்பாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்குடன், தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பூநகரி, கிராஞ்சி - இலவன்குடா பகுதிக்கு அமைச்சர் விஜயம்
இதேவேளை, பூநகரி, கிராஞ்சி - இலவன்குடா பகுதியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறித்த பகுதிக்கும் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்ததோடு, சம்பந்தப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
கடலட்டைப் பண்ணைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும், தமது தொழிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பண்ணைகளை அமைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்சனைகளை கோரிக்கையாக கேட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோரிக்கைகளை ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
