ட்ரம்ப்பிடம் உதவி கோரிய ரணிலின் ஆதரவாளர்
கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆதரவாளர் ஒருவர் தாங்கியிருந்த பதாதை ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது.
கைது செய்யப்பட்டு நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப்பிடம் (Donald Trump) உதவி கோரும் வகையிலான பதாதை ஒன்றை ரணிலின் ஆதரவாளர் ஒருவர் வைத்திருந்தார்.
குறித்த பதாதையில் “ட்ரம்ப், தயவு செய்து ரணிலுக்கு உதவுங்கள்“ (TRUMP PLEASE HELP RANIL) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கவனத்தை ஈர்த்த பதாதை
அதாவது பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இந்தநிலையில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்ட போதே குறித்த நபர் இவ்வாறான வாசகம் எழுதிய பதாதையை தாங்கியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த நபர் வைத்திருந்த பதாதை அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

