இலங்கையில் பல பெண்களை ஏமாற்றி பண மோசடி! சூட்சுமதாரி கைது: வெளியாகிய பின்னணி
மோசடி
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை வெவ்வேறு பெயர்களில் வெளியிட்டு பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த நரேஷ் நிஷாந்த தாபரே என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி
குறித்த நபர் நாடு முழுவதும் பல பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது.
ராகுல் ஜயசிங்க என்ற பெயரில் இந்த சந்தேக நபர் தோன்றியுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் சந்தேக நபர் இருபத்தைந்து லட்சத்து அறுபதாயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாக விஷேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
விசாரணைகளின் போது சந்தேக நபர் பாணந்துறை ஹிரணவில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு வாங்கப் போவதாகக் கூறி மோசடி
திருமணத்திற்குப் பின் தங்குவதற்கு வீடு வாங்கப் போவதாகக் கூறி ஹோமாகம பெண்ணிடம் இருந்து சந்தேகநபர் பணத்தை பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் பல வார இறுதி நாளிதழ்களில் திருமண விளம்பர பகுதியில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.