சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு
8 தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரத்னாயக்க, 2000ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம், மிருசுவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளானார்.
ஜனாதிபதியால் விடுதலை
எனினும் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் கருணையைப் பெற்று விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று நீதியரசர்கள், மனுவின் விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்தனர்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உட்பட பல மனுதாரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர் உட்பட்டவர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு 2020 மார்ச் 26 அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும் பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
மரண தண்டனை
2000ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல் அட் பார் அமர்வு 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதித்தது.
இதனையடுத்து, 2017 மே 20 அன்று, உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு, ரட்நாயக்கவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒருமனதாக உறுதி செய்தது.
இதேவேளை நேற்று மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்னவுடன்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார். சட்டமா அதிபர்
சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புல்லே முன்னிலையானார்.
