மன்னார் மக்களிடம் இருந்து அநுரவிற்கு பறந்த முக்கிய கோரிக்கை!
மன்னாரிலிருந்து இளவன்குளம் ஊடாகப் புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (23-01-2026) காலை முதல் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.
மன்னாரிலிருந்து இளவன்குளம் ஊடாகப் புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கையெழுத்துப் போராட்டம்
இவ்வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்காக விடுவிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள், குறித்த வீதியைத் திறப்பதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் மாத்திரமன்றி வடக்கு மக்களும் நன்மையடைவார்கள் எனத் தெரிவித்தனர்.

மேலும், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தென்பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொண்டு, தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் மாவட்ட மக்களிடம் பெறப்படும் இந்தக் கையெழுத்துக்கள் மகஜராக அநுரவிற்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



