பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்தும் சிறை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (15) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்தமை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொன்றமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானின் கைது
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போது, சிஐடியினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு எதிராக சமர்பணம் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து பிள்ளையான் சார்பாக முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம் பிள்ளையானுக்கு சிறையில் வழங்கும் உணவு தொடர்பாகவும் அவரது தாயார் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு கடந்த வழக்கு விசாரணையின் போது அனுமதி கோரியது தொடர்பாக வாதங்களை முன்வைத்தார்.
அத்தோடு, நீதவான் சிறைச்சாலை அதிகாரியை அழைத்து பிள்ளையானின் உணவு மற்றும் தாயுடன் தொலைபேசியில் உரையாடுவது தொடர்பான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 22 ம் திகதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டதுடன் பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.
அதன்படி, லண்டனில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பாயிஸ் என்பவரை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை சர்வதேச காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 14 மணி நேரம் முன்