போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தான் போர்க்குற்றவாளி அல்ல என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகள் குறித்தும் தனது கவலைகளை சவேந்திர சில்வா பேசியுள்ளார்.
சவேந்திர சில்வாவின் குற்றங்கள்
ஒரு இராணுவ அதிகாரி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பது அவரது உரிமை. ஆனால் சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் வெறுமனே தமிழர்களின் அரசியல் குற்றச்சாட்டுகள் அல்ல என்பதையே முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
வடக்கு–கிழக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் இன்று வரை நீதியைத் தேடி நிற்கின்றன.
அவர்களின் சாட்சிகளும், மனித உரிமை அமைப்புகளின் ஆவணங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளும் இணைந்தே இந்தக் குற்றச்சாட்டுகள் உருவாகியுள்ளன.
2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வா 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அந்தப் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை விசாரணைகள் தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளன.
பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சட்டவிரோதக் கொலைகள், சரணடைந்தவர்களின் படுகொலை, சித்திரவதை மற்றும் கட்டளைப் பொறுப்பின் கீழ் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போன்றவை அவற்றில் அடங்குகின்றன.
இவை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அல்ல; ஆனால் நம்பகமான சாட்சிகளும் ஆவணங்களும் அடிப்படையாகக் கொண்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் என்பதே அவற்றின் முக்கியத்துவம்.
மக்னிட்ஸ்கி பாணித் தடை
இதனால்தான் அமெரிக்கா 2020ஆம் ஆண்டு சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நுழைவுத் தடையை விதித்தது. இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
பின்னர் 2025ஆம் ஆண்டு பிரித்தானிய அரசும் அவருக்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளை விதித்தது. சரணடைய முயன்றவர்களை கொல்ல உத்தரவிட்டதாகவும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்டதாகவும் பிரித்தானியாவின் தடைக் காரணங்களில் குறிப்பிடப்பட்டது.
ஒரு நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி மீது இரண்டு முக்கிய ஜனநாயக நாடுகள் மனித உரிமைத் தடைகளை விதிப்பது சாதாரணமான அரசியல் நிகழ்வல்ல.
இத்தகைய “மக்னிட்ஸ்கி பாணி” தடைகள் (உலகளவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழல்களில் ஈடுபடும் குறிப்பிட்ட நபர்கள் அல்லது அமைப்புகளை இலக்கு வைத்து விதிக்கப்படும் ஒரு வகையான பொருளாதார மற்றும் பயணத் தடைகள்) பொதுவாக தீவிரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே விதிக்கப்படுகின்றன.
எனவே, “எனக்குக் காரணம் தெரியவில்லை” என்று கூறுவது மட்டுமே அந்தத் தடைகளின் அரசியல் மற்றும் சட்டப் பின்னணியை அழித்துவிட முடியாது.
நீதிக்கான கதவு திறக்குமா?
இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சவேந்திர சில்வா போன்ற இராணுவத் தலைவர்கள் “யுத்த நாயகர்கள்” எனப் போற்றப்படுகின்றனர். நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட இராணுவத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஆனால் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் வேறு ஒன்றைக் கூறுகிறது. ஒரு போரை வென்றிருப்பது, போரின் போது மனித உரிமைகளை மீறுவதற்கான உரிமையை வழங்காது.
பொதுமக்கள் இலக்காக்கப்பட்டார்களா, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்களா, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யார், கட்டளைகளின் பொறுப்பு யாருக்கு என்பது அனைத்தும் விசாரணைக்குரிய கேள்விகளே.
சவேந்திர சில்வா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் அவருக்கான மிகப் பெரிய வாய்ப்பும் அதுவே.
குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை அவரது பெயரைத் தூய்மைப்படுத்தும். குற்றங்கள் இடம்பெற்றிருந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதிக்கான கதவைத் திறக்கும்.
இலங்கை இதுவரை முழுமையான சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்கத் தயங்கியிருப்பதுதான் உலக நாடுகளின் சந்தேகத்தையும் அதிருப்தியையும் நீடிக்கச் செய்கிறது.
உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத இடத்தில் மறுப்புகள் மட்டுமே பெருகும். இறுதியில் கேள்வி சவேந்திர சில்வா அவர் உண்மையாகவே போர்க்குற்றவாளி இல்லையெனில், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையை ஏன் அஞ்ச வேண்டும்?
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 31 நிமிடங்கள் முன்