எரிபொருள் விநியோக நெருக்கடி : ஜனாதிபதியை தலையிட கோரிக்கை
"நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்" என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச இன்று (14) தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகார மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக மாநாட்டில் குமார ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு
தற்போதைய எரிபொருள் விலையில் விற்பனை செய்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி, ஆர்.எம். பார்க், சினோபெக் மற்றும் எல்.ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும், நஷ்டங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.

தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்து வருவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மட்டுமே இருப்பது பொதுமக்களைப் பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் காலடி வைத்த சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள்
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறைக்குப் பிறகு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்து இந்த நாட்டிற்கு வந்தன.

மேலும், அந்த நிறுவனங்கள் போட்டி விலையில் எரிபொருளை விற்க அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் கூறியது. ஆனால், அந்த நிறுவனங்கள் இந்த நாட்டில் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய பிறகு, அவை அரசாங்கத்தின் விலையில் எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.
மேலும், தங்கள் எரிபொருள் விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்க நேர்ந்தால், அந்த நஷ்டத்தை அரசாங்கமே ஏற்கும் என்று அந்த நிறுவனங்கள் கூறி வருவதாகவும், இந்த நிலைமை பொதுமக்களை மட்டுமல்லாமல் எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் பாதித்துள்ளதாகவும் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |