ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று கூறுவதற்கும், அந்த வளர்ச்சியை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணர்வதற்கும் இடையே இன்னும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.
உணவுப் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகள் போன்றவை குடும்பங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து தீர்மானிக்கும் நிலையில், இலங்கை இன்று பொருளாதார மீட்சியையும் அரசியல் மாற்றத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறது. இதனால் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றுதான்: நாடு பொருளாதார ரீதியாக மீண்டு வருகிறதா என்பது மட்டுமல்ல; அரசியல் ரீதியாகவும் உண்மையில் மாறுகிறதா?
கடந்த சில ஆண்டுகள் இலங்கை அரசியலில் சாதாரணமான ஆட்சி மாற்றங்களின் காலமாக இருக்கவில்லை. 2022 பொருளாதார நெருக்கடி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சி, பழைய அரசியல் தலைமையின் மீதான கடுமையான அதிருப்தி, பின்னர் இடம்பெற்ற தேர்தல் மாற்றங்கள் என, நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை உருவானது.
இந்த மாற்றத்தின் உச்சமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன
இந்த முடிவை வெறுமனே ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியாகப் பார்ப்பது போதுமானதல்ல. அது பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் தீர்ப்பாகவும் அமைந்தது. ஊழலற்ற நிர்வாகம், பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி, அரசியல் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் “system change” என அழைக்கப்பட்ட அரசியல் மாற்றம் ஆகியவை மக்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சங்களாகின.
ஆனால் இப்போது மிகப் பெரிய கேள்வி எழுகிறது:
ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் அரசியல் கலாசாரம் உண்மையில் மாறியிருக்கிறதா?
2024 தேர்தலில் கிடைத்த 159 ஆசனங்கள் எந்தவொரு புதிய அரசாங்கத்திற்கும் அரிதாகக் கிடைக்கும் அளவிலான அரசியல் அதிகாரத்தை வழங்கின. அதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையில் புதிய முகங்களும் இடம்பெற்றன. பழைய அரசியல் தலைமுறையிலிருந்து வேறுபட்ட ஒரு புதிய அரசியல் தலைமுறைக்கு மக்கள் வாய்ப்பளித்தனர்.
இதன் அரசியல் முக்கியத்துவம் ஆழமானது. பல ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும், அரசியல் கலாசாரம் பெரிதாக மாறவில்லை என்ற விமர்சனம் நிலவியது.

தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் வேறு வடிவம் பெறுவது, அரசியல் நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரச வளங்களின் அரசியல் பயன்பாடு ஆகியவை மக்கள் மத்தியில் அரசியல் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து சிதைத்தன.
இந்தப் பின்னணியில்தான் NPP-யின் எழுச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்கள் ஒரு புதிய கட்சியை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. “இப்படியே இனிமேல் முடியாது” என்ற அரசியல் மனநிலையையும் வெளிப்படுத்தினர். ஆனால் தேர்தல் வெற்றி அரசியல் மாற்றத்தின் முடிவு அல்ல; அது அதன் தொடக்கம் மட்டுமே. அந்த மாற்றத்தை நிறுவனங்களுக்குள் கொண்டு செல்வதே உண்மையான சவால்.
புதிய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், ஊழல் தடுப்பு, வெளிப்படைத்தன்மை, அரச நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை முன்னிறுத்தி வருகிறது.
இவை காகிதத்தில் நிச்சயமாக வரவேற்கத்தக்கவை. ஆனால் அரசியலில் கொள்கை அறிவிப்புக்கும் அதன் நடைமுறை விளைவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது மட்டும் அரசியல் மாற்றத்தின் அடையாளமல்ல. அந்தச் சட்டம் பொதுமக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.
ஊழல் எதிர்ப்பு
அதேபோல், ஊழலை எதிர்ப்பதாக அறிவிப்பது மட்டும் போதாது. அரசியல் சார்பின்றி விசாரணைகள் நடைபெறுகிறதா? அதிகாரத்தில் இருப்பவர்களும் அதே சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறுகிறார்களா? அரச நிறுவனங்களில் நியமனங்கள் திறமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றனவா? என்பதுதான் மக்களின் அடுத்த கேள்வியாக இருக்கும்.
குறிப்பாக அரச நிறுவனங்களின் நிர்வாக நியமனங்கள் இங்கு முக்கியமான பரீட்சையாகின்றன. பல ஆண்டுகளாக அரச நிறுவனங்கள் அரசியல் நியமனங்களுக்கும் ஆதரவாளர்களுக்கான பதவி வழங்கல்களுக்கும் உட்பட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

இதனை மாற்றுவதாக தற்போதைய அரசாங்கம் கூறுகிறது. அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளுக்கான நியமனங்கள் தொழில்முறைத் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அதன் வாக்குறுதி.
ஊழல் எதிர்ப்பு என்பது எதிர்க்கட்சியில் இருந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதால் மட்டும் நிரூபிக்கப்படாது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் அதே அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதா என்பதில்தான் அதன் உண்மையான நம்பகத்தன்மை இருக்கிறது. பொருளாதாரத்திலும் இதே நிலைதான்.
பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்வது நிச்சயமாக நல்ல செய்தி. ஆனால் ஒரு குடும்பத்தின் பார்வையில் பொருளாதார மீட்சி என்பது GDP வளர்ச்சி விகிதம் அல்ல. அது சந்தையில் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, வேலைவாய்ப்பு, வீட்டுக் கடன் மற்றும் மாத இறுதியில் கையில் மீதமிருக்கும் பணம் ஆகியவற்றோடு தொடர்புடையது.
எனவே எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீது எழப்போகும் முக்கியமான கேள்வி “நாடு மீண்டதா?” என்பதல்ல; “நாடு மீண்டதன் பயன் யாருக்குக் கிடைத்தது?” என்பதாக இருக்கும்.
இலங்கையின் அரசியல் மாற்றம்
ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கத்தின் வலிமை மட்டுமே முக்கியமல்ல. எதிர்க்கட்சியின் வலிமையும் அவசியம். NPP-க்கு 159 ஆசனங்கள் இருப்பதால் அரசாங்கம் சட்டமன்ற ரீதியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சியின் பங்கு அரசாங்கத்தை விமர்சிப்பதில் மட்டும் முடிவடையக் கூடாது.
“அரசாங்கம் தவறு செய்கிறது” என்று கூறுவது எளிது. அதற்குப் பதிலாக “இதற்கு மாற்றாக நாங்கள் என்ன செய்வோம்?” என்ற கேள்விக்கு தெளிவான பதிலை வழங்குவதே உண்மையான எதிர்க்கட்சியின் அரசியல்.

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இனப்பிரச்சினை, மாகாண அதிகாரப் பகிர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற துறைகளில் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் குறையக்கூடும்.
அதேவேளை, இலங்கையின் அரசியல் மாற்றத்தை வடக்கு மற்றும் கிழக்கின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து மதிப்பிட முடியாது.
2024 தேர்தலில் NPP வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பெற்ற வாக்குகள் பாரம்பரிய இன அடிப்படையிலான அரசியல் கணக்கீடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கான முக்கிய அறிகுறியாக அமைந்தன. ஆனால் வாக்களித்தல் மட்டும் அரசியல் ஒருங்கிணைப்பின் இறுதி இலக்காக இருக்க முடியாது.
நிலம், காணாமல் போனோர் தொடர்பான கேள்விகள், மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, கல்வி, அபிவிருத்தி, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற நீண்டகால பிரச்சினைகளில் அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறு அமைகிறது என்பதே முக்கியம்.
இன அரசியலைத் தாண்டி ஒரு புதிய இலங்கை அரசியலை உருவாக்குவதாகக் கூறும் அரசாங்கம், அனைத்து சமூகங்களின் அரசியல் மற்றும் சமூக அச்சங்களுக்கும் நம்பகமான பதிலை வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 25 நிமிடங்கள் முன்