பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம் - கல்முனையில் சம்பவம் (படங்கள்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட உள்ளக வீதியில் நேற்று(15) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
இரு உள்ளக வீதிகளை இணைக்கின்ற நாற்சந்தியில் எதிரும் புதிருமாக வந்த பிள்ளையானின் வாகனத் தொடரணியில் பங்கேற்ற கப் ரக வாகனமும் மறுமுனையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விபத்திற்குள்ளான கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.







