கிழக்கில் அரங்கேறிய படுகொலைகள்! இனிய பாரதி விசாரணையில் சிக்கிய முக்கிய புள்ளி
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கருணா - பிள்ளையான் அணியின் முக்கியஸ்தருமான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஷ்பகுமாரிடம் மேற்கொள்ளப்படும் சி.ஐ.டி விசாரணையில் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக அறிய முடிகிறது.
2025 ஜூலை 6 அன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது, 2005 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கடத்தல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு, மிரட்டி பணம் பறித்தல், சித்திரவதைக் கூடங்கள் நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
இனிய பாரதியின் கைது
இனிய பாரதியின் கைது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளையான், 2025 ஏப்ரல் 8 அன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இனிய பாரதிக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர் 2025 ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, 2006 முதல் 2009 வரை அம்பாறை, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் ஏழு பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் அவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.
இதுதவிர, இனிய பாரதியின் சாரதியாக 2007-2009 காலப்பகுதியில் பணியாற்றிய செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ், 2025 ஜூலை 7 அன்று கல்முனை பிரதான பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.
தொப்பிமனாப் கைது
இதன் தொடர்ச்சியாக மற்றொரு சகாவான தொப்பிமனாப் என அழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன், முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர், 2025 ஜூலை 27 அன்று கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், இனிய பாரதியின் காரியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அவரது குழுவால் இயக்கப்பட்ட முகாம்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தேகத்திற்குரிய இடங்களை அகழ்ந்து ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு வருகிறது.
மேலும், இனிய பாரதி மீதான குற்றச்சாட்டுகளில், அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமாரின் படுகொலை உட்பட பல சம்பவங்கள் அடங்கும். இவர் மீது முன்பு கல்முனை நீதிமன்றத்தில் 10 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், 164 கிலோ கேரளா கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகி விடுதலையான சம்பவங்களும் காணப்படுகின்றன.
இனிய பாரதி கைதின் பின்னணியில் , கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டை முற்றுகையிட்டதோடு ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை இரண்டு வெவ்வேறு ஜீப் வண்டிகளில் அழைத்து வந்து சோதனையிட்டனர்.
இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்த கால பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் டி.எம்.வி. பி முகாம்களாக செயற்பட்டவற்றை சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சந்தேகத்துக்கு இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தை தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவராவார்.
இவர் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் கருணா பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
