யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை: உதய கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான்
கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்த்ரநாத்தை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்(pillaiyan),தன்னை இன்று சந்தித்த அவரது சட்டத்தரணி உதய கம்மன்பிலவிடம்(udaya gammanpila) தான் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் இலங்கை ஆட்சியாளர்கள் தன்னை நன்றாக பயன்படுத்தி விட்டு இப்போது கைவிட்டு விட்டார்கள் என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
யார் மீதும் பழியைச் சுமத்தவில்லை
குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளில் போது தான் யார் மீதும் பழியைச் சுமத்தவில்லை அல்லது காட்டிக்கொடுப்புக்களைச் செய்யவில்லை என்றும் அப்படி செய்வதாகச் சொல்லி கூறி பலர் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.
குற்றபுலனாய்வு திணைக்கள் அதிகாரிகள் முன்னிலையில் இன்று (15) 30 நிமிடங்கள் பிள்ளையானோடு உரையாடியபோதே உதய கம்மன்பிலவிடம் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் குறித்தும் இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கம்மன்பிலவுக்கு விளக்கமளித்த பிள்ளையான் அரச சாட்சியாளராக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு தமக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்
கடத்தல் விவகாரம் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்ட போதிலும் இப்போது ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்(easter attack) சம்பவத்தை தன்னுடன் கோர்ப்பதற்கு விசாரணையாளர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்திருக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போதும் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறும் பிள்ளையான் இந்த சம்பவம் தொடர்பில் தான் சிலரை காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் இதனால் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல்களை முற்றுமுழுதாக இதன்போது நிராகரித்துள்ளார்.
அரசாங்கத்தின் விசாரணைகள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளுப்படுவதாகவும் போர்க் காலத்தில் தன்னை நன்கு பயன்படுத்திய இதே தரப்பினர் தற்போது அரசியல் காரணங்களுக்காக தன்னை பழிவாங்குவதாகவும் இது தொடர்பில் ஜனநாயகத்தை விரும்பும் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோசமான நடவடிக்கை இல்லையா
தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட கம்மன்பில்ல உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய பிள்ளையானுக்கு இப்படியான அநீதிகளை செய்வது நியாயமா இப்படியானவருக்கு படுக்கை வசதி கூட செய்யாமல் இருப்பது மோசமான நடவடிக்கை இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து பிள்ளையானிடம் கேட்டு அறிந்து கொண்ட உதய கம்மன்பில இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் சட்டத்தரணி என்றவகையில் அவரை அடிக்கடி பார்த்து நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக இதன்போது கம்மன்பில உறுதியாக தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
