மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசாங்கம் வகுத்துள்ள திட்டம்
பொது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற இன்னும் 3 வருடங்கள் காணப்படுவதாகக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசாங்கத்தின் தரப்பில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மூன்று வருடங்கள் அவகாசம் காணப்படுகிறது.
அந்த மூன்று ஆண்டுகளை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதையே முதலில் ஆராய வேண்டும்.
சில அமைச்சர்களின் தீர்மானங்கள் அல்லது செயற்பாடுகளை அரசாங்கத்திலுள்ள உறுப்பினர்கள் விமர்சிப்பதற்கு இடமுள்ளது.
எனினும் பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, கவலைகள் அல்லது விமர்சனங்களை அரச கூட்டங்களில் முன்வைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
