தமிழர்களின் வரலாற்றை சிதைக்கும் தென்னிலங்கையின் திட்டம் : செல்வம் எம்.பி பகிரங்கம்
தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகின்றதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்து விடக்கூடாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (27) மன்னாரில் (Mannar) இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய வீரர்களின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன அழிப்பு
இங்கு மேலும் தெரிவிக்கையில், “ஓர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை. ஒரு இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாக உள்ளது. இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம் பெற்றுள்ளது.
தன்னைக் கொலை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைவார்கள் என தலைவர் கூறிய தீர்க்கதரிசனம் 1983 ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.
ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் இருக்கிறோம்.
ஒரு காலத்திலே தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது.
மக்களுக்காக குரல் கொடுத்தல்
தமிழீழ விடுதலை இயக்கம் (Telo) தலைவர்களையும், போராளிகளையும் இழந்த இயக்கமாக தொடர்சசியாக செயற்பட்டு வந்தாலும் கூட தலைவர்களின் சிந்தனையின் அடிப்படையில் எல்லாப் போராளிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என எண்ணுகின்றது.
இதன் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியுள்ள போதும் ஏனைய ஐந்து கட்சிகளுடன் போராட்ட கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைத்து செயற்பட்டு வருகிறோம்.
தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடக்கு கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயற்பாட்டை இங்கே திறம்பட செய்யக் கூடிய வாய்ப்பை எமது ஒற்றுமையின்மையால் காவு கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இருந்து விடுபடுவோம்.
எல்லா கட்சிகளும் ஒன்றினைந்து மக்களின் விடுதலைக்காக செயற்பட்டு மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மிக செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு இன்றைய நாளில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எமது ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்து விடக்கூடாது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |