பிரான்ஸில் 3 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்
மனித கடத்தல் புகாரின் அடிப்படையில் 303 பயணிகளுடன் பிரான்ஸில் 3 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் அங்கிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏ-340 என்ற குறித்த விமானம், துபாயிலிருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவுக்கு 303 பயணிகளுடன் சென்ற நிலையில் கடந்த 22 -ம் திகதி திடீரென பிரான்சின் வட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மனிதக் கடத்தல்
எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறக்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், பின்பு மனிதக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இரண்டு நாள்களாக தங்கவைக்கப்பட்டனர்.
அதில் இருந்து இருவரை பிரான்ஸ் நாட்டு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
பெரும்பாலான இந்தியர்கள்
அதன்படி, விமான பயணிகள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவு
விமானத்தில் பயணித்தவர்கள் நிகாரகுவாவுக்கு சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா நாட்டிற்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
விசாரணைக்கு பின்னர் தடுத்து வைக்கப்பட்ட விமானம் பிரான்சை விட்டு இன்று வெளியேறலாம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |