தமிழ் இயக்கங்களை நசுக்க ‘ரோ’ மேற்கொண்ட திட்டமிட்ட சதி
இந்தியாவில் தங்கியிருந்த ஈழ விடுதலை இயக்கங்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களிடம் இந்த இயக்கங்களுக்கு இருந்துவந்த ஆதரவை குறைக்கவும் இந்தியாவின் உளவுப் பிரிவான ‘ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு (RAW – Research and Analyse Wing) பல சதித் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தது.
இயக்கங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியது முதல், இயக்கங்களுக்கு உள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தியதன் பின்னணியில் இந்திய உளவு அழைப்பான RAW இனது கைகள் இருந்ததாக பல தமிழ் இயக்கங்கள் பின்நாட்களில் குற்றம் சுமத்தியிருந்தன.
இந்திய RAWஅமைப்பின் பூரண கண்காணிப்பின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயற்பட்டு வந்த தமிழ் இயக்கங்களின் உள்ளே திடீர் திடீர் என்று உட்பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இயக்கங்களின் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு திடீரென்று பதவி ஆசை ஏற்பட ஆரம்பிக்கலாயிற்று. மாற்று இயக்கங்களுடன் முரண்பாடுகள் வளர்ந்தன.
தமது இயக்க நடவடிக்கைகளை மாற்று இயக்கங்கள் கண்காணிக்கின்றன, தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சிறிலங்கா இராணுவத்திற்கு மற்றய இயக்கங்கள் வழங்குகின்றன என்பது போன்ற சந்தேகங்கள் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஏற்பட்டன.
‘சந்தேகங்கள் ஏற்பட்டன என்று கூறுவதைவிட சந்தேகங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயக்கமோதல்கள் போன்றனவற்றிற்கு இந்தியப் புலணாய்வு பிரிவான ‘ரோ அமைப்பினரது சதிவேலைகளே காரணமாக இருந்தன.
ஒவ்வொரு இயக்கத்திற்கும் மாற்று இயக்கங்கள் பற்றி பிழையான அல்லது பிழையான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியதான தகவல்களை இந்திய ‘ரோ அமைப்பினரே வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழ் இயக்கங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கும், தமக்குப் பிடிக்காத ஈழத் தமிழ் தலைவரைகளை மற்றைய தமிழ் அமைப்பினைக்கொண்டே பழிவாங்குவதற்கும் றோ பல சதிகளை நடாத்தியிருந்தது.
இதோ ஒரு உதாரணம்
த.வி.கூ.தலைவர்கள்
படுகொலை 1985ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான திரு.தர்மலிங்கம் மற்றும் திரு.ஆலாலசுந்தரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல இந்தியா மற்றும் சர்வதேசம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள் இந்தப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
கொலை பழி விடுதலைப் புலிகள் மீது வந்து விழுந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளைச் செய்ததாக அனைவருமே நம்பினார்கள்.
விடுதலைப் புலிகளே இந்த படுகொலைகளைச் செய்ததாகக் த.வி.கூட்டனித் தலைவர்களும் குற்றம் சுமத்தினார்கள். 1986ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையில் ஈழத்தில் மோதல் உருவாகி, அதனைத் தொடர்ந்து டெலோ அமைப்பு விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டது.
டெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்களும், நூற்றுக்கணக்கான டெலோ உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்காணவர்கள் புலிகளால் கைதுசெய்யப்பட்டார்கள்.
அவ்வாறு புலிகளால் கைதுசெய்யப்பட்ட டெலோ உறுப்பினர்களுள் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் ராஜன் என்ற உறுப்பினர், ஒரு அதிர்ச்சிகரமான தகவலை புலிகளிடம் வெளியிட்டார்.
அந்தத் தகவல் இந்திய உளவுப் பிரிவான றோவினது ஒரு முக்கிய சதியை அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்தது.
ஒப்புதல் வாக்குமூலம்
அதாவது த.வி.கூட்டணித் தலைவர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் போன்ரோரின் படுகொலையில் தானும் பங்கேற்றதாக அந்த டெலோ உறுப்பினர் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளால் அவர் தீவிரமாக விசாரிக்கப்பட, ஒரு பெரிய இரகசியச் சதி அம்பலமானது.
தமிழர் விடுதலைக் கூட்டனி முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் படுகொலை செய்யும்படியான உத்தரவு டெலோ அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பொபி என்பவரால் தமக்கு வழங்கப்பட்டதாகவும், தாம் காரணம் கேட்டபொழுது இது தலைமைப் பீடத்தின் முடிவு.
இது ஒரு அரசியல் தந்திரம். விளக்கம் தேவையில்லை என்று அவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அந்த டெலோ உறுப்பினர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அந்த டெலோ உறுப்பினர் வழங்கியிருந்த வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்.
‘இக்கொலைகளுக்கு வலன்டைன் தலைமைதாங்கினார். நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் நடவடிக்கையில் பங்குபற்றினோம். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வல்வெட்டித்துறையில் இருந்த எங்களது முகாமில் பழுப்பு நிற மொறிஸ் ஒக்ஸ்பேர்ட் கார் எங்களிடம் தரப்பட்டது.
இந்தக் கார் சம்பவத்திற்கு முன்னய நாள் கிருபா என்பவரால் எங்கிருந்தோ கடத்திக்கொண்டுவரப்பட்டிருந்தது. அந்தக் காரில் நாம் நால்வரும் மாலை 7.30 மணிக்கு ஆலாலசுந்தரத்தின் வீட்டுக்குச் சென்றோம். பாஸ்போர்ட் விடயமாக அவருடன் பேசவேண்டும் என்று கூறினோம்.
வெளியே வந்த அவரைப் பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கம் வீட்டிற்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களுடன் கதைப்பதற்கு வந்துள்ளார் என்று கூறி அவரையும் காரில் ஏற்றினோம்.
அவர்களை அழைத்துக்கொண்டு 8 அல்லது 8.30 மணியளவில் கோண்டாவிலை அடைந்தோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் அங்கு இறக்கிவிட்டு ஆலாலசுந்தரத்தை நல்லூர் இராஜ வீதிச் சந்திக்குக் கொண்டு சென்றோம். சனநடமாட்டம் அற்ற ஒதுக்குப் புறத்தில் ஆலாலசுந்தரத்தின் கண்களைக்கட்டி நானும் வலன்டைனும் அவரைச் சுட்டுக் கொன்றோம்.
பின்னர் திரும்பிவந்து தர்மலிங்கத்தை ஏற்றிக்கொண்டு தாவடி றோட்டில் உள்ள தோட்டவெளிக்குக் கொண்டு சென்றோம்.
அவரையும் சிட்டிபாபு சுட்டுக்கொன்றார். பின்னர் அவர்களது உடல்களை அவர்களது தொகுதிகளுக்குக் கொண்டு சென்று போட்டோம். பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் தொலைவில் இருந்ததால் அன்றிரவு அவரைக் கொல்லமுடியாமல் போய்விட்டது. நீலன் திருச்செல்வத்தையும் கொல்வதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றதாக அறிந்தேன்.
இக் கொலைகளுக்கு ஒரு உபஇயந்திரத் துப்பாக்கி, இரண்டு ஏ.கே-47 ரகத் துப்பாக்கிகள் எம்மால் உபயோகப்படுத்தப்பட்டன’ இவ்வாறு அந்த டெலோ உறுப்பினர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படியான உத்தரவை டெலோவை இயக்கிய இந்திய உளவுத்துறை அதிகாரியாலேயே டெலோவின் வழங்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.
காரணம்
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக ஈழத் தமிழ் தலைமையை மிதவாத தலைமைகளிடம் இருந்து பிடுங்கி தமது கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்ட ஆயுத அமைப்புகளிடம் கொடுக்க விரும்பிய இந்தியப் புலனாய்வுப் பிரிவு, அந்த நேரத்தில் தனது பூரணகட்டுப்பாட்டின் கீழ் செயற்படாத விடுதலைப் புலிகளையும் இந்தக் கொலைகளினூடாக மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
அதனை நோக்காகக் கொண்டே இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் தங்கியிருந்த ஈழ விடுதலை இயக்கங்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களிடம் இந்த இயக்கங்களுக்கு இருந்துவந்த ஆதரவை குறைக்கவும் இந்தியாவின் உளவுப் பிரிவான ‘ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு| பல சதித் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தது.
பிடிபட்ட உளவுத்துறை அதிகாரி
தமிழ் நாட்டு காவல்துறை உளவுத்துறையின் டீ.ஐ.ஜி ஆக இருந்த கே.மோகணதாஸ் இந்தியாவில் தங்கியிருந்த விடுதலை இயக்கங்கள் பற்றிய விபரங்களை சிறிலங்கா அரசுக்கு வழங்கினார் என்ற விடயம் பின்னாளிலேயே இயக்கங்களுக்கு தெரியவந்தது.
இயக்க தலைமைகள் பற்றியும், உறுப்பினர்கள் தொகை பற்றியும், அவர்களது நடவடிக்கைகள், அவர்களிடமுள்ள ஆயுதங்கள் போன்ற விபரங்களை சிறிலங்கா அரசிற்கு இவர் வழங்கியிருந்தார் என்ற தகவல் நீண்ட காலத்தன் பின்னரே வெளிவந்தது.
தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் மாற்று இயக்கங்கள் மூலமாகவே சிறிலங்கா இராணுவத்தைச் சென்றடைகின்றன என்றே அதுவரை ஒவ்வொரு இயக்கங்களும் நம்பியிருந்தன.
மாட்டிக்கொண்ட றோ அதிகாரி
இதேபோன்று இயக்கங்களுடன் நெருங்கிப் பழகி பின்னர் இயக்கங்கள் பற்றிய தகவல்களை சிறிலங்கா அரசிற்கும்; இயக்கங்களின் மீது தனது கழுகுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்த அமெரிக்க உளவு ஸ்தாபனமான அமைப்பிற்கும் வழங்கிவந்த ஒரு அதிகாரியின் குட்டு நீண்ட நாட்களின் பின்னரே உடைந்தது.
தமிழ் நாட்டில் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிவந்த இந்திய ‘ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு (RAW)இ தமிழ் இயக்கங்களுடனான தனது தொடர்புகளுக்கு உண்ணிக்கிருஷ்ணன் என்ற மலையாள அதிகாரியை நியமித்திருந்தது.
உண்ணிக்கிருஷ்ணன் தமிழ் இயக்கங்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு இயக்க நடவடிக்கைகளுக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
இயக்கங்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி, இயக்கங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்திய சதியில் இந்த அதிகாரியே பிரதானமாகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(பின்னாளில் இந்த அதிகாரிக்கும்; CIA நிறுவணத்திற்கும் இடையில் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இந்திய அரசால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.) இயக்கங்களுக்கு இடையிலான பகையை ஏற்படுத்திய கைங்காரியத்தில் ‘ரோ அமைப்பின் திட்டமிட்ட செயற்பாடுகள் இருந்துவந்தது நீண்ட காலத்தின் பின்னரே இயக்கங்களுக்கு தெரியவந்தது.
ஆனால் இயக்கங்கள் ‘ரோ இனது சித்து வேலைகள் பற்றி அறிந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது. பிரதான இயக்கங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவற்றைப் பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த அதேவேளை தமிழ் நாட்டில் ஈழ விடுதலை இக்கங்கள் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பல முயற்சிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சி
அப்பொழுது இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளாக இருந்த ‘டெலோ அமைப்பினரும், சிதறிப் போகும் ஆரம்ப கட்டத்தில் இருந்த ‘புளொட் அமைப்பினரும், மற்றய சில உதிரி ஈழ இயக்கங்களும் தமிழ் நாட்டில் பல்வேறு கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
முற்றுமுழுதாக இந்தியாவின் உதவிகளையும், ஆலோசனைகளையும் மட்டுமே நம்பி போராட்டம் நடாத்திவந்த இதுபோன்ற இயக்கங்கள், கொள்ளைகளையும், சமூகவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் நிலைக்கு திட்டமிட்டுக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
இந்த இயக்கங்களின் தலைமைகளின் திறமையின்மை மற்றும் கட்டுப்பாடு இன்மை என்பன ஒருபுறம் இருக்க, கொள்ளை, களவு என்பனவற்றில் இவ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஈடுபடும் வகையில் நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
ஏற்படுத்தப்பட்டன. வீடுகளில் கொள்ளை, வங்கிக் கொள்ளை, ஆட்கடத்தல், கொலை என்று தமிழ் நாட்டில் இந்த இயக்க உறுப்பினர்களின் சமூக விரோத நடவடிக்கைகள் 1986ம், 87ம் வருடங்களில் உச்சத்தை அடைந்தன.
அதேவேளை இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்ட இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளும் வேடிக்கையாகவே இருந்தன.
தமிழ் நாட்டில் இதுபோன்ற சமுகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்திரிந்த போரளிகளை தமிழ் நாட்டு காவல்துறையினர் கைதுசெய்யும் சந்தர்ப்பங்களில், ‘றோ அதில் தலையிட்டு அவர்களை விடுதலைசெய்து தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை கணகச்சிதமாக போராளிகளின் பக்கம் திருப்பிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
அண்ணா நகரில் கொள்ளை. ஈழப்போராளி கைது என்று கொட்டை எழுத்துக்களில் முதல் நாள் பத்திரிகைகளில் செய்தி வரும். மறுநாளே காவல்துறையினர் கைதுசெய்த போராளி விடுதலை என்றோ அல்லது போராளி தப்பி ஓட்டம் என்றோ செய்தி வெளியாகும்.
‘ஈழப்போராளிகளுக்கு உதவுகின்றோம் பேர்வழிகள் என்று கூறிக்கொண்டு செயற்பட்ட மத்திய உளவு அமைப்பான ‘ரோ, உண்மையிலேயே தமிழ் நாட்டு மக்கள் மத்தில் ஈழப் போராளிகளுக்கு இருந்த ஆதரவை சிதைப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டன.
அதில் படிப்படியாக வெற்றியும் கண்டன. அக்காலத்தில் எந்த ஒரு ஈழப் போராளியையும் விடுதலைப் புலி என்றே தமிழ் நாட்டு மக்கள் அழைத்து வந்தார்கள்.
‘புளொட் என்றும், ‘டெலோ என்றும் வேறுபடுத்திப் பார்க்க தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாண்மையான மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
சிறிலங்காவில் எந்த இயக்கப் போராளி கொல்லப்பட்டாலும் ‘கொட்டியா என்று சிங்கள இராணுவத்தினர் அழைத்தது போன்று தமிழ் நாட்டில் அனைத்து இயக்கங்களையும் ‘விடுதலைப் புலிங்க என்றுதான் அழைப்பார்கள்.
புலிகளின் செயற்பாடுகள், அவர்களது நடவடிக்கைகள், அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள், புலிகள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் நடந்துகொண்ட விதம் போன்றன புலிகள் பற்றிய பிரமிப்பை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியருந்தது. ஆனால் தமிழ் நாட்டில் புலிகள் பெற்றிருந்த பிரபலமே புலிகளில் பெயரைச் சிதைப்பதற்கும் சதிவேலைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
மற்றய இயக்க உறுப்பினர்களால் பல சந்தர்பங்களில் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமுகவிரோத செயல்கள் அனைத்தும் புலிகளாளேயே மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் நாட்டில் உள்ள ஒரு தொகுதி மக்கள் நினைத்துவிடும் அபாயம் இதனால் ஏற்படலாயிற்று.
களவுகள், கொள்ளைகளில் ஈடுபட்ட ‘புளொட் இயக்க உறுப்பினர்கள் தங்களை புலிகள் என்று கூறி கொள்ளையடித்த சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன. அக்காலத்தில் SOLT( Students Organisation of Liberation Tigers) என்ற பெயரில் விடுதலைப் புலிகள் சென்னை அடையார் உட்பட பல இடங்களில் அலுவலகம் திறந்து, தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்கள்.
அதேபோன்று தமிழ் நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த ஈழத் தமிழ் மாணவர்களது நடவடிக்கைகளினாலும், அகதிகளாக தமிழ் நாடு வந்து தங்கியிருந்த இளைஞர்களின் தீய செயல்களினாலும் ஈழத்தமிழர்கள் பற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு இருந்த அபிப்பிராயம் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பல செயற்திட்டங்களை இந்த ளுழுடுவு உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
ஈழத் தமிழர்கள் எங்காவது பிரச்சனைப்படுத்தினால் தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்கள் அவர்களைப் பிடித்து புலிகளின் இந்த ளுழுடுவு அலுவலகத்தின் ஒப்படைக்கும் அளவிற்கு இதன் செயற்பாடுகள் அங்கு பிரசித்திபெற்றிருந்தது.
ஆனால் ஈழத்தமிழர்கள் பற்றி நல்ல எண்ணத்தை தமிழ் நாட்டு மக்களிடம் கட்டி எழுப்பும் நோக்குடன் புலிகள் மேற்கொண்ட இதுபோன்ற பல நடவடிக்கைகள், மாற்று இயக்கங்களின் திட்டமிட்ட சதி காரணமாக சிதறிப் போகலாயின.
ஈ.பி.ஆர்.எல்.எப்.
அதேபோன்று, விடுதலைப் புலிகள் போலவே அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பும் (டக்ளஸ் தலைமையிலான சூழைமேட்டுச் சம்பவங்கள் போன்ற ஒன்றிரண்டைத் தவிர) பெரிதாக சமூக விரோத நடவடிக்கைகளில் தமது உறுப்பினர் ஈடுபடாமல் பார்த்துக்கொண்டதையும் இங்கு குறிப்பரிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஈழத் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடக்கூடாது என்பதிலும், அவர்கள் தமக்குள் மோதுபட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்பதிலும், ஆரம்பம்முதலே இந்திய உளவு அமைப்புக்கள் உறுதியாக இருந்தன. அதில் அவர்கள் வெற்றியும் கண்டிருந்தார்கள்.
அத்தோடு 1986ம் ஆண்டில் இந்திய அரசு சிறிலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச நினைத்த உடனேயே, தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் இருந்து போராட்ட இயக்கங்களை அன்னியப்படுத்தும் சதிகளை இந்த புலனாய்வு அமைப்பு கனகச்சிதமாக அரங்கேற்றியிருந்தது.
போராட்ட இயக்கங்கள் தமக்குள் மோதுபட்டு தம்மைத்தாமே பலவீனப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற சதியையும் மிகக் கவனமாகவே இந்தியப் புலனாய்வாளர்கள் அரங்கேற்றியிருந்தார்கள்.
தொடரும்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |