நாட்டில் புதிய நீர்வழிப் போக்குவரத்து விரைவில் : அமைச்சரவை அனுமதி
நாட்டில் அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவை ஊடக பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda jayatissa) இன்றைய (22.04.2025) அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின் போக்குவரத்துக்காகவும் நீர்மூலங்கள் மற்றும் நீரோட்டங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டின் கடலோரத்தையும் , உள்ளக ரீதியாக காணப்படும் நீரோட்டங்களையும் பயன்படுத்தி ஒரு சில பிரதேசங்களை உள்ளடக்கி படகுச் சேவைகளை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீர்வழிப் போக்குவரத்து
அதன்படி, புத்தளம் - கோட்டை, கோட்டை - காலி, காலி - மாத்தறை கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், ஹமில்டன் கால்வாய், பேர வாவி, தியவன்னா ஓயா மற்றும் மாது கங்கை போன்ற நீர் வளங்களைப் பயன்படுத்தி உள்ளக நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான வசதிகளை வழங்குவதன் மூலம் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
