தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்! எதிர்ப்பு வெளியிட்டுள்ள முதலாளிமார் சம்மேளனம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொழில் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள முன்மொழிவுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெளியிட்ட அறிவிப்பு குறித்து சாதகமான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே, முதலாளிமார் சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது.
நாளாந்த சம்பளம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கமைய, தேயிலை உற்பத்தி மற்றும் உற்பத்தி வர்த்தகம், இறப்பர் மற்றும் பதனிடப்படாத இறப்பர் உற்பத்தி வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ஊடகங்கள் மூலம் பரவலான செய்திகள் வெளியாகியிருந்தன. மே 1 ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொட்டகலையில் இடம்பெற்ற கூட்டத்திலும், அதிபர் இதை வலியுறுத்தினார்.
நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், அதிபரின் கூற்று தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள்
இது தொடர்பாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தேயிலைச் செய்கை மற்றும் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்துள்ளார்.
இந்த முடிவு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மே 15 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கவும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவும் இந்த அறிவிப்புகள் மூலம் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளில் உண்மையில்லை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் மே 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சில ஊடகங்கள் அறிக்கையிடுவது தவறானதாகும்.
உத்தேச புதிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கான திகதி அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளத் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை” என சம்மேளனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |